நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்கும் விஷயத்தில் கழக அரசியல் புகுந்து விளையாடிய கதை இது.
சென்னை ராயபுரம், காசிமேடு பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடந்த வாரம்
கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றார்கள். அப்போது ஆந்திர கடல் எல்லை ஓரமாக சேதம் அடைந்த நிலையில் படகு ஒன்று தண்ணீரில் அலைபாய்ந்தபடி இருந்தது. நெருங்கிச் சென்று பார்க்க, இரண்டு பேர் அதில் மயங்கிக்கிடந்தார்கள். இருவரையும் தங்கள் படகுகளில் ஏற்றிக்கொண்டவர்கள், 'அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள். ஒரு நாளில் கரை திரும்பிவிடுவோம்' என்ற தகவலை காசிமேடு மீனவர்களிடம் செல்போன் மூலம் தெரிவித்தார்கள். மயங்கி இருந்த இருவரும் வேதாரண்யத்தை சேர்ந்தவர்கள்.
இந்தத் தகவல், ராயபுரம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ-வான ஜெயக் குமாருக்கு தெரிந்தது. அவர், இது குறித்து வேதாரண்யத்துக்குத் தகவல் கொடுத்து காணாமல்போன மீனவர்களின் உறவினர்களை சென்னை வரவழைத்தார். கடந்த 3-ம் தேதி தனது கட்சியின் மீனவர் அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புடைசூழ மீட்கப்பட்ட மீனவர்களை வரவேற்க காசிமேடு துறைமுகத்துக்கு சென்ற ஜெயக் குமாருக்கு அதிர்ச்சி!
இது குறித்து ஜெயக்குமாரிடம் பேசினோம், ''மீனவர்களை காணவில்லை என்று பல நாட்கள் போராட்டம் நடந்தது. இந்த அரசு கண்டுக்கொள்ளவில்லை. 'நாங்களே தேடிக் கொள்கிறோம். டீசல் மட்டும் கொடுங்கள்...' என்று மீனவர்கள் கேட்டதற்கும் மறுத்துவிட்டார்கள். ஆனால், மீனவர்களே கண்டுபிடித்துக் கொண்டுவந்தபோது, பெயர் வாங்கிக்கொள்ள மட்டும் வருகிறார்கள். விடுவேனா..? நானே நடுக்கடலுக்கு சென்று மீனவர்களை வரவேற்று அவர்களுக்கு கைச்செலவுக்கு 5,000 ரூபாய் பணமும் கொடுத்து அனுப்பினேன்!'' என்றார்.
அமைச்சர் சாமியோ, ''அரசுத் தரப்பில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. தற்செயலாக சென்னை மீனவர்கள் கண்களில் அவர்கள் பட்டவுடன், எனக்குத் தகவல் அளிக்கப்பட்டது. அரசு முறைப்படி மீட்கப் பட்ட மீனவர்களுக்கு என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ... அதை நான் செய்தேன்...'' என்றார்.
ம்... அலை கடலுக்குள்ளும் நடக்குது அரசியல்!
No comments:
Post a Comment